top of page

சமூக வலைதள தொடர்புகளுக்கு

  • Facebook Classic
  • Google+ App Icon
  • LinkedIn App Icon
  • Twitter Classic

© KS Kalai

துவேசக் கோடு !

 

கையளவு நெஞ்சுக்குள் 
கடலளவு நஞ்சு நிரப்பி 
கண்டங்கள் சமுத்திரங்கள் 
கடந்து செல்லும் வேர்பரப்பி 
ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் 
அறியாமைத் துவேசம் ! 

மரமேறி வீழ்ந்தோனை 
மாடாக ஏறி மிதித்து 
சிரமேறும் சிறுதனத்தால் 
சீறுகின்ற இயக்கங்கள் 
அபலைகளின் குருதியாற்றில் 
தூண்டிலிட்டு மீன் பிடிக்க 
ஒற்றைக்காலில் நிற்குதுவோ ? 

புண்ணுற்று எருதுநிற்க 
களிப்புற்ற காக்கைகள் 
முதுகேறி புண்கொத்தி 
பசியடக்க வேட்கையுற்று 
சொல்லொணா தீங்கிழைத்து 
செய்வதெல்லாம் நன்மையாமோ ? 

மலிந்து போன குரூரத்தால் 
நலிந்து போன ஓரினத்தை 
சூறையாட வேட்டையாட 
சூரத்தனம் தேவையாமோ ? 

மதம் என்ற மரம் விட்டு 
பறக்கின்ற பட்சிகளும் 
மீண்டுமந்த மரம் வந்து 
மடமையுற வைக்கின்ற 
மதப் போராட்டங்கள் ஓயாதா ? 
மனப் போராட்டங்கள் தீராதா ? 

ஈனத்தனம் எதுவென்று 
சுற்றும் பூமி நன்கறியும் 
இனத்துவேசம் தம்கவசம் 
என்றநிலை உச்சம்தொட 
முற்றும் பூமி பற்றியெரியும் !

bottom of page