top of page

சமூக வலைதள தொடர்புகளுக்கு

  • Facebook Classic
  • Google+ App Icon
  • LinkedIn App Icon
  • Twitter Classic

© KS Kalai

மீட்டல் !

 

செவ்வானம் சிரிச்சிருக்க பனிப்பூவு பூத்திருக்க 
காட்டுவழி ஒத்தயடி நடந்துபோன காலமது ! 
ஆண்டுபல அழிஞ்சாலும் மனசுக்குள்ள இந்நாளும் 
அழியாம தேங்கிநிக்கும் அந்தநாள் ஞாபகங்கள் ! 

ஒருவேள சோத்துக்கு மூவேள யோசிக்கும் 
ஏழக்குடும்பத்து ஏழு பேரில் நானொருத்தன் 
கூழ்குடிக்க வக்கில்லாம திண்டாடி வாழ்ந்தாலும் 
பள்ளிக்கூடம் போய்ப்படிக்க மறக்காத காலமது ! 

பால்குடுத்துப் பசியாத்தி வளத்துவிட்ட அம்மாவும் 
பாடுபட்ட கஷ்டத்த மறச்சிகிட்டு அப்பாவும் 
அட்டைக்கு ரத்தங்குடுத்து அல்லோடு பகலொழச்சி 
அஞ்சிப்பேர படிக்கவைக்க அல்லபட்ட காலமது ! 
=== 
ரோட்டோர வாகமரம் கூதகாத்த வீசுரப்போ 
தேவார திருப்பதிகம் மனசுக்குள்ள பேசுறப்போ 
மனப்பாடம் செஞ்சிக்கிட்டு காலாற நடந்தோடி 
கூடார பள்ளிக்கு கூட்டாக நாம் போவோம் ! 

பாக்குபட்ட இழுவண்டி பள்ளத்துல இழுத்துக்கிட்டு 
கொட்டபாக்கு பம்பரத்த கொக்கரிச்சி உருட்டியாடி 
தென்னமட்ட மட்டையாட்டம் மறக்காம தினமாடி 
காட்டுக்குச்சி கிட்டிபுள்ளு கலகலத்த காலமது ! 

பள்ளிவிட்டு வீடுவந்து பால்பேணி தூக்கிகிட்டு 
துள்ளிக் குதிச்சி குறுக்குப்படி எறங்கியோடி 
பால்காரன் வாரவர பசியோட காத்திருந்து, 
ஊத்திபுட்டு படியேறி வூட்டுக்குநா வந்திருக்கே(ன்) !

சோறிருந்தா கொட்டிகுவே இல்லாட்டி கணக்கில்ல 
பழகப்பட்ட வயித்துக்கு பசியால வருத்தமில்ல! 
கூடபொறந்த நாலுபேரும் இப்படிதான் இருப்பாங்க 
கூட்டணியா கூத்தடிப்போ அந்தியில எந்தநாளு(ம்)!

வெட்டுத்துணி ஒட்டுபோட்ட பொஸ்தகப்பை, 
மஞ்சநிற மாகிப்போன பள்ளிக்கூட வெள்ளாட- 
எள்ளி நகையாடி என்னகொன்ன கூட்டமுண்டு 
எல்லாரயும் அன்னைக்கே மனசார மன்னிச்சே(ன்) !

சொல்லிகிட்டே போகலாங்க அந்தகால நினைவுகள
தேனாக இனிக்குஞ்சில தேளாக கொட்டுஞ்சில 
தானாக என்னதட்டி எண்ணத்த சொட்டுதிங்க 
தாலாட்டு நெனவெல்லா எந்நாளும் சொகம்தாங்க! 

bottom of page